ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கனமழை கொட்டியது. கவுந்தப்பாடியில் அதிகபட்சமாக 144 மில்லி மீட்டர் மழை பதிவானது. கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு பெய்யத் தொடங்கிய மழை விடிய விடிய கொட்டியது.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், மூலப்பாளையம், கொல்லம்பாளையம், பி.பி.அக்ரஹாரம், ஹவுசிங் போர்டு பகுதி, சூளை, கனிராவுத்தர்குளம் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால், நேற்று காலை வாகன ஓட்டிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.
ஈரோடு மூலப்பட்டறை அருகே உள்ள காந்திபுரம் குடிசைப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள், நேதாஜி காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் புகுந்து குளம்போல் சூழ்ந்து நின்றது. வெண்டிபாளையம், ரங்கம்பாளையம் ரயில்வே நுழைவு பாலம் பகுதியில் மழைநீர் தேங்கி நின்றதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் பயிர்கள் நீரில் மூழ்கின.
கிருஷ்ணாபுரத்தில் ஓடையில் இருந்து வெள்ளம் வெளியேறி சலங்கபாளையம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அந்த பகுதியில் உள்ள 50 வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் மக்கள் விடிய விடிய தூங்கமுடியாமல் அவதிப்பட்டனர்.
வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வாளி, குடங்கள் மூலம் வெளியேற்றினர். ஈரோடு மாவட்டத்தில் அதிக பட்சமாக கவுந்தப்பாடியில் 144.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக மழை பெய்ததாக மக்கள் தெரிவித்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையளவு ( மி.மீ.,):
கவுந்தப்பாடி 144.2, பவானி 103.6, ஈரோடு 100, கொடுமுடி 98.2, பெருந்துறை 64.2, வரட்டுப்பள்ளம் 61.2, மொடக்குறிச்சி 54, குண்டேரிப்பள்ளம் 51.6, கோபி 41.4, நம்பியூர் 36, கொடிவேரி 32.2, அம்மாப்பேட்டை 30, சத்தியமங்கலம் 27, தாளவாடி 18, சென்னி மலை 11 மி.மீ. மழை பெய்தது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் நேற்று அதிகாலை 3 மணியளவில் பெய்த கனமழை யால் கூட்டப் பள்ளி காலனி மசூதி தெருவில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது. அதுபோல் சூரியம்பாளையம் பகுதியிலும் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது. சிலரது வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது.இதேபோல் பள்ளி பாளையம் ஆற்றுப்பாலம் அருகே குமாரபாளை யம் சாலையில் இருந்து வழியும் மழைநீர் சாக்கடை கால் வாயில் செல்ல முடியாததால் பழைய ஆற்றுப் பாலத்தின் மீது வெள்ளம் போல் ஓடியது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றன. இரண்டு கார்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டன. தகவல் அறிந்து வந்த ஈரோடு தீயணைப்புத் துறையினர் காரில் சிக்கியவர்களை மீட்டனர்.
பழைய பாலத்தில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு குமாரபாளையம்-பவானி பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு பாறை உருண்டு விழுந்தது. அவற்றை கோயில் நிர்வாகத்தினர் விரைந்து சீரமைத்தனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டார்.மழையளவு விவரம்: (மி.மீ.,): எருமப்பட்டி 20, குமாரபாளையம் 71.40, மோகனூர் 36, நாமக்கல் 9, பரமத்தி வேலூர் 24, புதுச்சத்திரம் 45, ராசிபுரம் 72, திருச்செங்கோடு 92, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 7, கொல்லிமலை செம்மேடு 71 மி.மீட்டர் மழை பதிவானது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago