கல்வி பயணம் தடையில்லாமல் தொடர - புளியம்பட்டிக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் : தி.மலை மாவட்ட ஆட்சியருக்கு மாணவிகள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

கல்வி பயணம் தடையில்லாமல் தொடர, தானிப்பாடியில் இருந்து புளியம்பட்டிக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என ஆட்சியர் பா.முருகேஷூக்கு, தானிப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி அருகே உள்ள புளியம்பட்டி, உடையார்பாளையம் கிராமங்களில் வசிக்கும் மாணவ, மாணவிகள், ‘நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை’ கல்வி பயில தானிப்பாடிக்கு செல்ல வேண்டும். இதற்காக, புளியம்பட்டியில் இருந்து புதூர் செக்கடி வரை, சுமார் 3 கி.மீ., தொலைவு நடந்து வந்துசென்று, அதன்பிறகு பேருந்தில் பயணிக்க வேண்டும். தினசரி காலை மற்றும் மாலையில் தலா இரண்டு மணி நேரம் பயணம் செய்தால்தான், கல்வி கிடைக்கும் என்ற நிலை உள்ளது.

மேலும், பள்ளி வகுப்பு முடிந்து வீடு திரும்பும்போது, இரவு நேரத்தில் நடைபயணம் மேற்கொள்ளும் சூழல் உள்ளதால், மாணவிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளி படிப்பில் இருந்து மாணவிகள் வெளியேறும் நிலை நிலவுகிறது. இதற்கு பேருந்து சேவை கிடைக்காததுதான், பிரதான காரணமாக உள்ளது. இந்நிலையில், பள்ளி நேரங்களில் பேருந்துகளை இயக்கி, ‘தடையில்லா கல்வி வழங்குக’ என்ற ஒற்றை கோரிக்கையுடன் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் மாணவிகள் நேற்று மனு அளித்துள்ளனர்.

பின்னர் மாணவிகள் கூறும்போது, “எங்களது புளியம்பட்டி கிராமத்துக்கு புதிதாக அரசுப் பேருந்தை இயக்க கோரிக்கை விடுக்கவில்லை. தானிப்பாடி கிராமத்தில் இருந்து புதூர்செக்கடி வரை இயக்கப்படும் அரசுப் பேருந்தை, 3 கி.மீ., தொலைவு உள்ள புளியம்பட்டிக்கு இயக்குமாறு வலியுறுத்துகிறோம்.

தானிப்பாடியில் இருந்து புதூர் செக்கடிக்கு மாலை 6 மணிக்கு பேருந்து வருகிறது. பின்னர், அங்கிருந்து வீட்டுக்கு நடந்து செல்ல 45 நிமிடம் முதல் 1 மணி நேரமாகிறது. இரவு நேரத்தில், மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத அசாதாரண சூழல் நிலவுவதால், கல்வி பாதிக்கப்படுகிறது. இதற்கு அஞ்சியே, இந்த வாரம் பள்ளிக்கு செல்லவில்லை. மருத்துவம் உட்பட அனைத்து தேவைகளுக்கும் தானிப்பாடிக்கு செல்ல வேண்டும். பள்ளி நேரத்தில் அரசுப் பேருந்து இயக்கப்பட்டால், மருத்துவ சிகிச்சை பெற செல்லும் நோயாளிகளும் பயன் பெறுவார்கள்.

தானிப்பாடியில் இருந்து புளியம்பட்டி கிராமம் வழியாக ஆத்திப்பாடி கிராமத்துக்கு இயக்கப்பட்டு வந்த தனியார் மினிபஸ் சேவையும், கரோனாவால் நிறுத்தப்பட்டுவிட்டது.

காவல்துறையின் நெருக்கடியால், ஆட்டோவும் இயக்கப்படவில்லை. இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, நாங்கள் பாதிக்கப்படுகிறோம். மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொண்டுள்ள மாவட்ட ஆட்சியர், தானிப்பாடியில் இருந்து புதூர் செக்கடி வரை இயக்கப்படும் அரசுப் பேருந்தை, புளியம்பட்டி வரை இயக்க வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்