தாராளமாக புழங்கும் பிளாஸ்டிக் பைகள் - ஆரணி நகராட்சியில் குப்பை சேகரிக்கும் பணியில் தொய்வு : தேங்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு என குற்றச்சாட்டு

By வ.செந்தில்குமார்

ஆரணி நகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தாராளமாக விற்பனை செய்யப்படுவதுடன், வீடு, வீடாக குப்பையை தரம் பிரித்து சேகரிக்கும் பணியில் பெரிய அளவுக்கு தொய்வு ஏற்பட்டு சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் 33 வார்டுகளை கொண்டது. நகரில் சேரும் குப்பை அகற்றும் பணி நகராட்சி சார்பில் 18 வார்டுகளிலும், தனியார் ஒப்பந்ததாரர் மூலம் 15 வார்டுகளில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. நகரில் தினசரி 27 டன் அளவுக்கு குப்பை சேகரிக்கப்பட்டாலும் சுமார் 16 டன் அளவுக்கு மக்கும் குப்பை தரம் பிரிக்கப்பட்டு 5 நுண்ணுயிர் உரக்கிடங்குகளில் இயற்கை உரமாக மாற்றுகின்றனர்.

இவற்றில் மக்காத, மறு சுழற்சி செய்ய முடியாத குப்பைகளான பிளாஸ்டிக் கப், பாட்டில்கள், தட்டுகள் உள்ளிட்டவற்றை தனியாக பிரித்து சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

அதேநேரம், நகராட்சியில் குப்பை அகற்றும் பணியில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறும்போது, ‘‘நகராட்சியில் குப்பை அகற்றும் பணியில் வீடுகள் தோறும் குப்பையை தரம் பிரித்து வாங்குவதில் சுணக்கம் உள்ளது. இதன்மூலம் அரசின் அடிப்படை திட்டமே கேள்விக்குறியாகி உள்ளது. நகரில் குப்பையை தரம் பிரிக்கும் பணி பெரியளவில் நடப்பதில்லை. சேகரிக்கும் குப்பையை நீர்நிலைகள், சாலை ஓரங்களில் கொட்டுவதுடன் ஒரு சில இடங்களில் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால், சுகாதாரச் சீர்கேடு பிரச்சினையும் எழுந்துள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஆரணி நகரில் தாராளமாக நடைபெறுகிறது. குறிப்பாக, பிளாஸ்டிக் கவர்கள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளது. அதை நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. 33 வார்டுக்கும் வாங்கிய பேட்டரி வாகனங்கள் முழுமையான பயன்பாட்டில் இல்லை. இயற்கை உரம் மூட்டை மூட்டையாக தேங்கி யுள்ளன. நகராட்சியில் குப்பை சேகரிக்கும் பணியில் அரசியல் விளையாடுகிறது. இதற்கு, குறைந்தபட்ச தீர்வாவது காண வேண்டும்’’ என்றனர்.

இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘நகராட்சி சார்பில் வீடு, வீடாகச் சென்று குப்பை சேகரித்து தரம் பிரிக்கும் பணி நடைபெறுகிறது. நகராட்சி மூலம் தயாரிக்கப்படும் இயற்கை உரத்தை ஆரணி மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றிய தோட்டக்கலை துறைக்கு 1 கிலோ ரூ.3 வீதம் விற்பனை செய்கிறோம்.

நகரில் உள்ள வீடுகளில் வீட்டுத் தோட்டம், மாடித்தோட்டம் வைத்திருக்கும் நபர்களுக்கு இலவசமாக இயற்கை உரத்தை வழங்கி வருகிறோம். அத்துடன் விவசாயிகளுக்கு 1 கிலோ ரூ.3 விலையில் வழங்கி வருகிறோம்.

தரம் பிரிக்கும் பணியின்போது கிடைக்கும் பால் கவர், உடைந்த பாட்டில்கள், இரும்பு, தகரம் உள்ளிட்டவற்றை தூய்மை பணியாளர்கள் தனியாக விற்கின் றனர்.

அதேபோல், மறு சுழற்சி செய்ய முடியாத 11 டன் பிளாஸ்டிக் பொருட்களை சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பி உள்ளோம். இதற்கு முன் பிளாஸ்டிக் கழிவை தார்ச்சாலை அமைக்கும் பணிக்காக பயன்படுத்தப் பட்டது’’ என தெரிவித்தனர்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஆரணி நகரில் தாராளமாக நடைபெறுகிறது. குறிப்பாக, பிளாஸ்டிக் கவர்கள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளது. அதை நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்