காத்திருப்பைத் தவிர்க்க - இணையதளம் வழியே நெல் விற்பனை : விவசாயிகள் பயன்பெற கள்ளக்குறிச்சி ஆட்சியர் அழைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை இணையதளம் வழியாக முன்பதிவு செய்து, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன்பெறுமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வாயிலாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. நடப்பு பருவத்தில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லினை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்திட ‘E-DPC’ இணையதளம் வாயிலாக (www.tncsc-edpc.in) விவசாயிகள் பெயர், ஆதார் எண், புல எண், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை எளிய முறையில் பதிவேற்றம் செய்து, முன்பதிவு செய்திட வேண்டும்.

மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டவுடன் விவசாயிகள் நிலம் இருக்கும் கிராமங்களின் அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இணைய வழியின் மூலமாகவே கிராம நிர்வாக அலுவலரின் ஒப்புதல் பெறப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்கள் விவசாயிகளின் அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

விவசாயிகள் தங்களது அலைபேசி எண்ணில் பெறப்பட்ட குறுஞ்செய்தியின் அடிப்படையில், நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்திடலாம். இவ்விணைய வழி பதிவுத் திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பதிவு செய்து பயன்பெறலாம்.

கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட முதுநிலை மண்டல மேலாளர் அல்லது மண்டல மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE