டெங்கு காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் : உள்ளாட்சி அமைப்பினருக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுகாதாரத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்துப் பேசியதாவது:

நாமக்கல் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அலுவலர்கள் சுகாதாரப் பணிகளை பொது சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். ஒரு சில நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் கண்டறியப்படும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முழு மூச்சுடன் செயல்பட வேண்டும்.

கொசு ஒழிப்பு, புகை மருந்து அடித்தல், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்து தினசரி குளோரினேசன் செய்தல், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், டயர்களை அகற்றுதல், சாக்கடை கால்வாய் அடைப்புகளை கண்டறிந்து உடனடியாக சீர் செய்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருவதை உள்ளாட்சித் துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள், அரசு மருத்துவமனைகளின் சிகிச்சை செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து அலுவலர்களிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்