சென்னையைச் சேர்ந்த சர்ச்சை சாமியார் சிவக்குமார் திருச்சி உறையூர் காவல் நிலையத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, திருச்சி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
சென்னை புத்தகரத்தில் யோகக்குடில் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருபவர் சிவக்குமார். இவர் பல்வேறு மதங்கள் குறித்து பல்வேறு சர்ச்சையான வீடியோக்களை யூடியூபில் வெளியிட்டு வந்தார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட இவர், மீண்டும் இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சை வீடியோ வெளியிட்டதைத் தொடர்ந்து செப்.21-ம் தேதி மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் மெய்வழிச்சாலையை பின்தொடர்பவர்கள் குறித்து சர்ச்சையான கருத்துகளை பதிவிட்ட சாமியார் சிவக்குமார் மீது திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் மணிகண்டன் ஜூலை 27-ம் தேதி மாநகர ஆணையரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் உறையூர் காவல் நிலையத்தில் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக உறையூர் போலீஸார் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாமியார் சிவக்குமாரை கைது செய்து, திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண்.4-ல் நேற்று ஆஜர்படுத்தினர்.
சிவக்குமாரை அக்.13-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நடுவர் குமார் உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago