திருநெல்வேலி அருகே அடுத் தடுத்து கொலை சம்பவங்கள் நடைபெற்ற கிராமப்பகுதிகளில் போலீஸாரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் சைக்கிளில் இரவில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கோபாலசமுத்திரத்தில் கடந்த 2012, 2013-ம் ஆண்டுகளில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை களுக்கு பழிக்குப்பழியாக கடந்த 13-ம் தேதி கீழச்செவல் நயினார்குளத்தை சேர்ந்த சங்கர சுப்பிரமணியன் என்பவரும், கடந்த 15-ம் தேதி செங்குளத்தில் கோபாலசமுத்திரத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரும் அடுத் தடுத்து கொலை செய்யப்பட்டதால் இப்பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. இந்த இரு கொலை வழக்குகளிலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்பகுதி மக்கள் பழிவாங்கும் போக்கை கைவிட்டு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று, காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் கிராமந்தோறும் சென்று மக்களை சந்தித்து பேசி வருகிறார்கள்.
அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க விருதுநகர், தேனி, திருப்பூர், கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் வரவழைக்கப்பட்டு, பல்வேறு இடங்களிலும் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக கடந்த 2 வாரங்களில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்குமுன் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவும் திருநெல்வேலிக்கு வந்து ஆய்வு நடத்தியிருந்தார்.
கோபாலசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமார் அபினபு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்கிறார்கள். கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் முன்னீர்பள்ளம், பத்தமடை, மேலச்செவல், பிராஞ்சேரி, கோபாலசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களுக்கு காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago