ஈரோடு மாவட்டத்தில் தற்போது கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காலிங்கராயன் பாசன பகுதி, மேட்டூர் வலது கரை வாய்க்கால் பாசன பகுதிகளில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள், மக்காச்சோளம், ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்படுவதால் உரத் தேவை அதிகரித்துள்ளது. பாசனப்பணிகள் தீவிரமடைந்துள்ளதால், விவசாயிகளுக்குத் தேவையான உரத்தினை, விநியொகம் செய்வதில் வேளாண்மைத்துறை ஈடுபட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட வேளாண் பணிகளுக்காக, தூத்துக்குடியில் இருந்து நேற்று முன் தினம் 724 மெட்ரிக் டன் யூரியா, 20:20:0:13 உரம் 504 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் உரம் 60 மெ.டன்னும் வந்தடைந்தது. இதனைப் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ். சின்னசாமி கூறியதாவது
ஈரோடு மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் சில்லரை உர விற்பனை நிலையங்கள் உட்பட 556 உர விற்பனை நிலையத்தில் உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
தற்போது ஈரோடு மாவட்டத்தில் யூரியா 990 மெ.டன்னும், டி.ஏ.பி உரம் 1688 மெ.டன்னும், பொட்டாஷ் உரம் 1986 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 6500 மெ.டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மண் பரிசோதனை செய்து உரப்பரிந்துரைக்கு ஏற்ப உரங்களை பெற்று பயன்படுத்த வேண்டும்.
உர விற்பனை நிலையங்களில், உரங்களின் விலைப்பட்டியல் விவசாயிகளுக்கு தெரியும்படி வைக்க வேண்டும், கொள்முதல் மற்றும் விற்பனையை உரிய ஆவணங்களுடன் மேற்கொள்வது, அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டும் உரங்களை இருப்பு வைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் உரங்களை வாங்கும் போது, மூட்டையில் அச்சடிக்கப்பட்ட விலையினை பார்த்து, உரிய ரசீது பெற்று வாங்க வேண்டும். விதிமுறைகளை மீறும் உர விற்பனை நிலையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago