கீழ்பவானி பாசனக் கால்வாய்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் செ.நல்லசாமி, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
கீழ்பவானிப் பாசனத்திட்டம் ஒரு மழைநீர் அறுவடைத் திட்டம். இந்த திட்டத்தில், கட்டப்பட்ட அணையும், வெட்டப்பட்ட கால்வாய்களும் மண்ணால் ஆனவை. இப்பாசனத்துக்கு விடப்படும் நீர், கடலில் வீணாக வடிவதில்லை. மாறாக, கணிசமான அளவு நிலத்தின் கீழ் செறிவூட்டப்படுகிறது. காவிரி நடுவர் மன்றம் இந்தத் திட்டத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளது. அத்தோடு நில்லாமல், இந்தியாவெங்கிலும் இத்திட்டம் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
கீழ்பவானி பாசனத் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள, தற்போது பயன்பாட்டில் உள்ள கால்வாயில் நீர் திறக்கப்பட்டால், மெதுவாகக் கடந்து செல்லும். ஆனால், கான்கிரீட் கால்வாயாக மாற்றினால், நீர் கால்வாயில் தங்காமல் ஓடி விடும். கான்கிரீட் தளம் அமைத்தால், கடைக் கோடி பகுதிகளுக்கு, உரிய நீரை உரிய காலத்தில் கொண்டு செல்ல முடியும் எனக் கூறுவது தவறானது. பரம்பிக்குளம் ஆழியார் திட்டம், முல்லை பெரியாறு வைகைத் திட்டம் போன்ற கான்கிரீட் கால்வாய் திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது.
கீழ்பவானி பாசனப்பயனாளிகளின் எதிர்ப்பையும் மீறி, கடந்த ஆட்சியில் கீழ்பவானி கால்வாயை கான்கிரீட் கால்வாயாக மாற்றும் திட்டம் கொண்டு வரப்பட்டது. பாசன விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக, திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. எனவே, மக்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கும் தாங்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு, கீழ்பவானி கான்கிரீட் திட்டத்தை நிரந்தரமாகக் கைவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago