ஜவ்வரிசி தொழிலில் இந்தியாவிலேயே முன்னணியில் உள்ள - சேலம் மாவட்டத்தை சர்வதேச அளவுக்கு உயர்த்துவதே அரசின் நோக்கம் : ஆத்தூரில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

By செய்திப்பிரிவு

ஜவ்வரிசி தொழிலில் இந்தியாவிலேயே முன்னணியில் உள்ள சேலம் மாவட்டத்தை சர்வதேச அளவுக்கு உயர்த்த வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம், என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் தனியாருக்கு சொந்தமான நவீன சோகோ ஆலையில் மரவள்ளி விவசாயிகள் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தி நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், சேலம் சேகோ சர்வ் வளாகத்தில் ரூ.1.26 கோடியில் கட்டப்பட்டுள்ள மின்னணு ஏல மையம் மற்றும் ரூ.34 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நேரடி விற்பனை முனைய கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தார். பின்னர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது:

ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் மரவள்ளி விவசாயிகளின் கோரிக்கைகளான புதிய சேமிப்பு கிடங்கு, ஜவ்வரிசியை உணவுப் பொருளாக பயன்படுத்துவது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, கலப்படத்தை தடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தெற்காசிய அளவில் தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும் என்பதுதான் அரசின் குறிக்கோள். சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் முதல் மாநாட்டில் ரூ. 17 ஆயிரத்து 149 கோடி முதலீட்டுக்கு, 35 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

ஏற்றுமதியில் ஏற்றம் முன்னணியில் தமிழ்நாடு என்ற இரண்டாவது மாநாட்டில், ரூ 2,180 கோடியில் 25 புதிய தொழில் திட்டங்களுக்கு, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 42 ஆயிரத்து 145 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

திருப்பூர், கரூர், மதுரை கோவை உள்ளிட்ட 10 ஏற்றுமதி மையங்கள் மேம்படுத்தப்படும். ஜவ்வரிசி தொழிலில் இந்தியாவிலேயே முன்னணியில் உள்ள சேலம் மாவட்டத்தை சர்வதேச அளவுக்கு உயர்த்த வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் த.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சிறு, குறு தொழில்துறை அரசு செயலர் அருண் ராய், சேலம் ஆட்சியர் கார்மேகம், சேகோசர்வ் நிர்வாக இயக்குநர் பத்மஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.சேலம் மாவட்டம் ஆத்தூரில் மரவள்ளி விவசாயிகள் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தி நிறுவன பிரதிநிதிகளுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார். உடன் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர். படம்: எஸ்.குரு பிரசாத்5 இடங்களில் தொழிற்பேட்டை முதல்வர் தகவல்

சேலம் கருப்பூர் சிட்கோ-வில் நேற்று மாலை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில், பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக ரூ.168 கோடி முதலீட்டு மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம் தொடங்க இணைய வழியில் பதிவு செய்ய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

வான் வழி போக்குவரத்து, மின்சார உதிரி பாகம் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழகத்தில் 5 இடங்களில் தொழிற்பேட்டை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கத் தலைவர் இன்ஜினியர் மாரியப்பன் உள்ளிட்ட பலர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்