திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பொன்னணியாறு அணைக்கு, காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பொன்னணியாறு அணையின் உயரம் 51 அடி, கொள்ளளவு 120 மில்லியன் கன அடி. இந்த அணையின் நீர்மட்டம் செப்.24-ம் தேதி 23.64 அடியாக இருந்தது. இந்நிலையில், செப்.25-ம் தேதி பெய்த பலத்த மழையால் ஒரே நாளில் 5.08 அடி அதிகரித்து அணையின் நீர்மட்டம் 28.72 அடி ஆனது. வழக்கமாக மழை காலங்களில் அணையின் நீர்மட்டம் ஓரிரு அடி மட்டுமே உயரும். ஆனால், ஒரே நாளில் சட்டென்று 5.08 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்தது கடந்த பல ஆண்டுகளில் இதுவே முதல் முறை என்கின்றனர் விவசாயிகள்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க புறநகர் மாவட்டச் செயலாளர் வெ.சிதம்பரம் கூறியது: பாசனத்துக்காக கட்டப்பட்ட பொன்னணியாறு அணையால் விவசாயிகள் இதுவரை பெரிய அளவில் பலன் பெறவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மாயனூர் கதவணையில் இருந்து காவிரி ஆற்றின் வெள்ள உபரிநீரை நீரேற்றம் செய்து, பொன்னணியாறு அணை மற்றும் கண்ணூத்து அணை ஆகியவற்றுக்கு நீர் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பான ஆய்வுப் பணிகள் ரூ.40 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆய்வறிக்கை அப்போதே அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், திட்டத்தைச் செயல்படுத்த சாதகமான அம்சங்கள் உள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் பொன்னணியாறு அணையின் கீழ் உள்ள முகவனூர் கிராமத்தில் உள்ள 1,957 ஏக்கர் விளை நிலங்களும், செக்கனம் மற்றும் பழையக்கோட்டை கிராமங்களில் உள்ள 144 ஏக்கர் விளை நிலங்களும், கண்ணூத்து அணையின் கீழ் உள்ள 734 ஏக்கர் விளை நிலங்களும் பாசன வசதி பெறுவதுடன், இந்தப் பகுதிகளில் குடிநீர் வசதியும் மேம்படும். எனவே, காவிரியில் இருந்து பொன்னணியாறு அணைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும். இந்தத் திட்டத்தில் மருங்காபுரி வட்டத்துக்குட்பட்ட பகுதிகளையும் இணைக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அலுவலர்கள் கூறும்போது, “அணையில் 43 அடிக்கு அதிகமாக நீர்மட்டம் உயர்ந்தால்தான் அரசின் உரிய அனுமதியுடன் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படும். காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டம் குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago