மத்திய வேளாண் சட்டத்திற்கு எதிராக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறி்ச்சி மாவட்டத்தில் நேற்று திமுக கூட்டணி கட்சியினர் பல்வேறு இடங்களில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நேற்று வழக்கம் போல் கடைகள் திறந்திருந்தன. பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கின. விருத்தாசலத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கள்ளக்குறிச்சியில் சில கடைகளே அடைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
விருத்தாசலம் பாலக்கரையில் திமுக நகரச் செயலாளர் தண்டபாணி தலைமையில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். போலீஸார் அனைவரையும் கைது செய்து மாலையில் விடுவித்தனர். இதேபோன்று கள்ளக்குறிச்சிமாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூரில் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட அமைப்பாளர் மாதவன் தலைமையில் கடலூர் அண்ணா பாலம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிஐடியூ மாவட்ட செயலாளர் கருப்பையன்,திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளபுகேழந்தி, நகர செயலாளர் ராஜா, காங்கிரஸ் மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டசெயலாளர் ஆறுமுகம், நகர செயலாளர் அமர்நாத், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த், மக்கள் அதிகாரம்பாலு, ரவி, பொதுநல அமைப்பின் தலைவர் வெண்புறா குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிதம்பரத்தில் காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ சிந்தனைச்செல்வன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலாளர் ராஜா, காங்கிரஸ் நகர தலைவர் பாலதண்டாயுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிதம்பரத்தில் ரயில் மறியல் செய்ய முன்ற விவசாய சங்கத தலைவர்கள் ரவீந்திரன், ராமலிங்கம், ரெங்கநாயகி உள்ளிட்ட 36 விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் சகாபுதீன் தலைமையில்குருவாயூர் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட 52 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனால் குருவாயூர் விரைவு ரயில் 5 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இதே போல விழுப்புரம் வீரவாழியம்மன் கோயில் அருகே எஸ்டிபி கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது ரஃபி தலைமையில் 19 பேரும், கண்டமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் வட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் 10 பேரும், திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையில் வட்ட செயலாளர் சேகர் தலைமையில் 10 பேரும், திண்டிவனத்தில் இன்பஒளி தலைமையில் 18 பேரும் மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் ரயில் மறியல் மற்றும் சாலைமறியலில் ஈடுபட்ட 103 பேரை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago