வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவாக - சேலம் மாவட்டத்தில் 13 இடங்களில் சாலை மறியல் : எதிர்க்கட்சியினர், விவசாயிகள் உள்ளிட்ட 1,181 பேர் கைது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, நேற்று நடந்த நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவாக சேலம் மாவட்டத்தில் 13 இடங்களில் சாலை மறியல் நடந்தது. மறியலில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர், விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட 1,181 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், வேலைநிறுத்தப் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று நடந்தது. தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன.

சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் உள்ளிட்ட சில இடங்களில் பெரும்பாலான கடைகள் காலை 11 மணி வரை அடைக்கப்பட்டிருந்தன. பேருந்துகள் வழக்கம்போல இயங்கின.

சேலத்தில் கிராம வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதால் வங்கிப் பணிகள் முடங்கின. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் சந்திரமோகன் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, காங்கிரஸ் மாநகர் மாவட்டச் செயலாளர் பாஸ்கர், தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் மணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் மறியலுக்கு முயன்ற 500-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி, விவசாயிகளுக்கு ஆதரவாக சேலத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், மாவட்டச் செயலாளர்கள் நிஜாமுதீன், மணிவண்ணன், ராமமோகன், மகளிரணி நிர்வாகிகள் அனிதா, கோமதி, குமுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சேலம் கொண்டலாம்பட்டி சாலை சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் மோகன் தலைமை வகித்தார். பின்னர் மறியலுக்கு முயன்ற 40-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல, ஆத்தூர், தலைவாசல், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஓமலூர், சங்ககிரி, கெங்கவல்லி, கல்வராயன்மலை, மேச்சேரி உட்பட மாவட்டத்தில் 13 இடங்களில் மறியல் நடந்தது. இதில், ஈடுபட்ட பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் உள்ளிட்ட 1,181 பேரை போலீஸார் கைது செய்தனர்.

வேலைநிறுத்தப் போராட்டத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

நாமக்கல்லில் 27 இடம்

நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடந்த மறியலுக்கு, சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இதுபோல, நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பள்ளிபாளையம், குமாரபாளையம் என மொத்தம் 27 இடங்களில் சாலை மறியல், ரயில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சாலை மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்ட 695 பேரை போலீஸார் கைது செய்தனர். கைதானவர்கள் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். மாவட்டத்தில் வேலைநிறுத்தத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்