நாமக்கல் நகராட்சியில் ரூ.300 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டப்பணியை விரிவுபடுத்தவும், கூடுதலாக இரு இடங்களில் கழிவு நீர் சத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாமக்கல் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு உட்பட்ட குடியிருப்புகள், வணிக வளாகங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் திறந்த வெளியில் சென்று வந்தது. இதனால், துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது.
இதை தடுக்க நகராட்சியில் கடந்த 2013-2014-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பாதாள சாக்கடை மூலம் கொண்டு செல்லப்படும் கழிவு நீர் நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்து பின்னர் அவை விவசாய பயன்பாட்டுக்காக அருகேயுள்ள கொசவம்பட்டி ஏரியில் கலக்கப்படுகிறது.
இக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மொத்தம் 50 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்டதாகும். இந்நிலையில், நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து குறிப்பிட்ட அளவுக்கு மேல் கழிவு நீர் வெளியேற்றப்படுவதால் திட்டத்தை ரூ.300 கோடி மதிப்பில் விரிவுப்படுத்த நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
நாமக்கல் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடங்கப்பட்டபோது மொத்தம் 30 வார்டுகள் இருந்தன. பின்னர் நகராட்சியை ஒட்டியுள்ள 9 ஊராட்சிகள் நகராட்சியுடன் இணைக்கப்பட்டன. இதனால், வார்டுகளின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்தது. இதில், 23 வார்டுகளில் மட்டுமே தற்போது பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 16 வார்டுகளிலும் இத்திட்டம் விரிவுபடுத்தவும், கூடுதலாக இரு இடங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக திட்ட மதிப்பு ரூ. 300 கோடியாகும். இதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago