சேலம் மாவட்ட ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் 91 பேர் போட்டி : கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கு 11 பேர் போட்டியின்றி தேர்வு

சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் 91 பேர் போட்டியிடுகின்றனர்.

சேலம் மாவட்ட ஊரக உள்ளாட்சிகளில் காலியாகவுள்ள 35 பதவிகளுக்கான இடைத்தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி 10-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில், முருகன் (அதிமுக), சண்முகம் (திமுக), சிவலிங்கம் (தேமுதிக), பழனிசாமி (நாம் தமிழர்), சீனிவாசன் (மக்கள் நீதி மய்யம்), மணிகண்டன் (அமமுக) உள்ளிட்ட 11 பேர் போட்டியிடுகின்றனர். பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய 9-வது வார்டு ஒன்ரிய கவுன்சிலர் பதவிக்கு மாணிக்கம் (அதிமுக), சுரேஷ்குமார் (திமுக), தமிழரசன் (நாம் தமிழர்) உட்பட 11 பேர் போட்டியிடுகின்றனர்.

அதிகாரிப்பட்டி, வீராணம், தாதாபுரம், வெள்ளார், கரிக்காப்பட்டி, புளியம்பட்டி, சிக்கனம்பட்டி, சேலத்தாம்பட்டி, கோவிந்தம்பாளையம், புதூர் அக்ரஹாரம் உள்ளிட்ட 10 கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு மொத்தம் 39 பேர் போட்டியிடுகின்றனர்.

23 கிராம வார்டு உறுப்பினர் பதவியில் 11 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 12 கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கு 30 பேர் போட்டியிடுகின்றனர். மாவட்டத்தில் இடைத்தேர்தலில் மொத்தம் 91 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பூட்டு சாவி, சீப்பு, கட்டில், திறவுகோல், கார், ஆட்டோ ரிக் ஷா, மூக்குக் கண்ணாடி உள்ளிட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, வாக்குச் சீட்டுகள் அச்சடிக்க தேர்தல் அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நாளை (29-ம் தேதி) நடக்கவுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களில், வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்