மெகா தடுப்பூசி முகாமில் பங்கேற்றவர்களுக்கு விடுமுறை : ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்கம் கோரிக்கை

By செய்திப்பிரிவு

மெகா தடுப்பூசி முகாமில் பங்கேற்ற ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டுமென, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து துறை இயக்குநருக்கு சங்க நிர்வாகிகள் அனுப்பியுள்ள மனு:

ஊரக வளர்ச்சித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பாததால், கூடுதல் பணிச்சுமையுடன், பல்வேறு வளர்ச்சி மற்றும் சமூக நலத்திட்டப் பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பயனாளிகள் பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளை விரைந்து முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அது தொடர்பாக ஆய்வுகள் அடிக்கடி நடத்தப்படுவதால், ஊழியர்கள் மனச்சோர்வு அடைந்துள்ளனர்.

ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் களப்பணியாளர்களில், 40 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பேரிடர் மேலாண்மைப் பணிகளையும், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களுக்கு ஒதுக்குவதைக் கைவிட வேண்டும். கடந்த காலங்களில், நிதி ஒதுக்கீடு இல்லாமல் கரோனா தனிமைப்படுத்தும் மையங்களை பராமரிக்கும் பணியை மேற்கொள்ள நிர்பந்தப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று வாரங்களாக கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை அரசு நடத்தியது. இதற்கென தனியாக எவ்வித நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை. தடுப்பூசி முகாமிற்கு பொதுமக்களை வரவழைப்பதில் தொடங்கி, முகாம்களில் ஷாமியானா பந்தல் அமைப்பது, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு உணவு வாங்கித் தருவது உள்ளிட்ட செலவுகளை மேற்கொண்டுள்ளோம். எனவே, மெகா தடுப்பூசி முகாமில் பணியாற்றிய சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கியது போல், கடும் மன உளைச்சலில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டுகிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்