முறையான ஊதியம் மற்றும் கூடுதல் வேலை நேரத்துக்கு ஊக்கத்தொகை வழங்கக் கோரி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்-மோகனுார் சாலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனை உள்ளது. இம்மருத்துவமனையில் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 115 தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் 50 பேர் தூய்மைப் பணியிலும், மீதமுள்ளவர்கள் பாதுகாப்பு பணியாளர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், அரசு நிர்ணயித்த ஊதியத்தை தனியார் நிறுவனம் வழங்கவில்லை. கரோனா காலத்தில் கடந்த இரு ஆண்டுகளாக கூடுதல் நேரம் வேலை செய்தற்கான ஊக்கத் தொகையும் வழங்கவில்லை என தூய்மைப் பணியாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், தங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை தனியார் நிறுவன மேலாளர் மற்றும் மேற்பார்வையாளரும் கையாடல் செய்ததாகவும் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதைக் கண்டித்தும், தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்களை வழங்கக் கோரியும் நேற்று மாலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயில் முன்பு தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தனியார் நிறுவனத்தினர் பேச்சவார்த்தை நடத்தினர். எனினும், சுமுக முடிவு எட்டாததால் இரவு 7. 30 மணியைக் கடந்தும் போராட்டம் தொடர்ந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago