திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மேலாண்மைப் பள்ளி மற்றும் மலேசிய டெக்னாலஜி மாரா பல்கலைக்கழகம் ஆகியவை கல்வி இணைவுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளன.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இணையவழியில் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், மலேசிய டெக்னாலஜி மாரா பல்கலைக்கழக துணைவேந்தரின் பிரதிநிதி(ஆராய்ச்சி) முகமது நாசிப் சுரத்மன் பேசியபோது, ‘‘இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இப்பல்கலைக்கழகங்களின் கல்வி, கலாச்சாரம் மற்றும் ஆராய்ச்சி போன்றவற்றை வலிமைப்படுத்தும். இதன் மூலம் இரு பல்கலைக்கழகங்களுக்கும் பரஸ்பரம் வளர்ச்சிக்கு பலனளிக்கும்’’ என்றார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.செல்வம் பேசியபோது, ‘‘இன்றைய பரந்த உலகளாவிய தாராளமய கல்வி அமைப்பில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு பல்கலைக்கழகங்களுக்கும் மிகுதியான பயன்களை வழங்கும். தமிழகத்தில் நான்கில் ஒரு பங்கு கல்விச் சேவையை வழங்கும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் பணிகளுக்கு பேருதவி புரியும்’’ என்றார். இதைத் தொடர்ந்து இரு பல்கலைக்கழகங்களும் மேலாண்மைக் கல்வியில் இணைந்து செயல்பட பரஸ்பரம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளர் க.கோபிநாத், மலேசிய டெக்னாலஜி மாரா பல்கலைக்கழக வணிக மையத்தின் இயக்குநர் ஜாபர் பைமன் ஆகியோர் பங்கேற்றனர். புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கான ஏற்பாடுகளை மேலாண்மைப் பள்ளியின் களத் தலைவர் மு.செல்வம் செய்திருந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago