ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நரிக்குறவர் சமூகத்தினர் போராட்டம் :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் தங்களது வசம் உள்ள புறம்போக்கு நிலங்களில் விவசாயம் செய்ய அனுமதிக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தை நரிக்குறவர் சமூகத்தினர் நேற்று முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் வசித்து வரும் நரிக்குறவர் சமூகத்தினர் பலர் அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் இந்த நிலங்களில் விவசாயம் செய்யக் கூடாது என தடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நரிக்குறவர்கள் கடந்த 2 வாரங்களுக்கு முன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் உருண்டு தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஆட்சியர்  வெங்கடபிரியா, ஓரிரு நாளில் எறையூருக்கு நேரில் வந்து பார்வையிட்ட பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

அதன்பின், கோட்டாட்சியர் நிறைமதி எறையூருக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். ஆனாலும், உரிய நடவடிக்கை எடுக்காததால், நரிக்குறவர் சமுதாயத்தினர் நேற்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களுடன் ஏடிஎஸ்பி ஆரோக்கிய பிரகாசம், வட்டாட்சியர் சின்னதுரை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, முற்றுகை போராட்டத்தைக் கைவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்