செயல்வீரர்கள் கூட்டம், பிரச்சாரம் விறுவிறுப்பு - ஊரக உள்ளாட்சி தேர்தல் களத்தில் திமுக, அதிமுக தீவிரம் :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் நோக்கத்தில் அதிமுகவும் திமுகவும் தீவிர களப்பணியாற்றி வருகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களிலும் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 122 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 204 ஊராட்சி தலைவர், 1,731 ஊராட்சி வார்டுஉறுப்பினர் என, மொத்தம் 2,069 பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 6 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 376 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் போட்டியின்றி நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் களத்தில் 5,527 பேர் உள்ளனர். இவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணி கடந்த2 நாட்களுக்குமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 9 இடங்களில் வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிநடைபெறுவதாகவும், 8.5 லட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திமுக

கட்சி சின்னங்களின் அடிப்படையில் மாவட்ட ஊராட்சி வார்டு மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். திமுக, அதிமுக மற்றும் அவற்றின் கூட்டணி கட்சிகள் சார்பில் இந்த பதவிகளுக்கு வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவு திரட்டும் பணியில் அக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்தல் மற்றும் செயல்வீரர்கள் கூட்டங்கள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கீதாஜீவன், பெரியகருப்பன், மனோ தங்கராஜ், மாநில மகளிரணி செயலாளர் கனிமொழிஎம்.பி. உள்ளிட்டோர் கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.

பல்வேறு இடங்களில் காரியாலயங்களும் திறக்கப்பட்டு வருகின்றன. வேட்பாளர்களுடன் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

அதிமுக

அதிமுக சார்பில் தமிழக எதிர்க் கட்சி தலைவர் பழனிசாமி திருநெல்வேலி மாவட்டம் வந்து ஆலோசனை நடத்திவிட்டு சென்றுள்ளார். அக் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், மாவட்டச் செயலாளர் கணேசராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பல்வேறு இடங்களிலும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி வருகின்றனர். அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் கங்கைகொண்டானில் நேற்று நடைபெற்றது.

இதனிடையே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களிலும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE