திருநெல்வேலி மாநகர போலீஸாருக்கு வார விடுமுறை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. முதல் நாளில் 70 போலீஸார் வார விடுப்பு எடுத்துக்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் போலீஸாருக்கு வார விடுமுறை அளிக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இத் திட்டம் பல்வேறு மாவட்டங்களில் அமலுக்கு வந்துள்ளது. பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஒருவர், மன அழுத்தத்தில் பணிபுரிவதாக பதிவிட்ட வீடியோ வைரலானது. கடந்த 2 நாட்களுக்கு முன் திருநெல்வேலியில் ஆய்வு மேற்கொண்ட டிஜிபியின் கவனத்துக்கு இவ்விஷயம் கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தை முடித்துக்கொண்டு, பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்ற டிஜிபி, வாட்ஸ் அப்பில் பேசிய காவலரை சந்தித்து பேசினார். பின்னர் பாளையங்கோட்டையில் ஆயுதப்படை குடியிருப்புக்கு சென்று அங்குள்ளவர்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.
போலீஸாருக்கு வாரவிடுமுறை அளிக்க உத்தரவிட்டும் வார விடுப்பு அளிக்கப்படாமல் இருப்பது குறித்து சிலர் அவரிடம் தெரிவித்தனர். நிர்வாக காரணங்களால் வாரவிடுப்பு அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த டிஜிபி, விரைவில் வாரவிடுப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இந்நிலையில், திருநெல்வேலி மாநகர போலீஸாருக்கு வார விடுமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. காலியிடங்கள் நிரப்பப்படும்வரை சுழற்சி முறையில் வார விடுப்பு அளிக்கப்படும் என்றும், முதல் நாளில் 70 பேர் வார விடுப்பு எடுத்தனர் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago