கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் நேற்று - ஒரே நாளில் 2.19 லட்சம் பேருக்கு தடுப்பூசி :

By செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் மூன்றாவது கட்டமாக கரோனா மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 2,19,864 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கோவை மாவட்டத்தில் 439 முகாம்களில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இப்பணியில் 878 அங்கன்வாடி பணியாளர்கள், தடுப்பூசி போடுபவர்கள் 439 பேர், மேற்பார்வையாளர்கள் 200 பேர் ஈடுபட்டனர். 65 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. ஒரு சில இடங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவியது. கோவை வஉசி மைதானத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, “கோவை மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 1,13,618 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில், 672 மையங்களில் 80,210 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் பல்லடம் வட்டத்துக்கு உட்பட்ட கணபதிபாளையம் பிரிவு, தெற்குபாளையம் பிரிவு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற முகாம்களுக்கு சென்று ஆய்வு செய்தார். மாநகராட்சி பகுதிகளில் ஆணையர் கிராந்திகுமார் பாடி சந்திரகாவி, கோவில்வழி பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற முகாம்களுக்கு சென்று பார்வையிட்டார். மாவட்டம் முழுவதும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 1,948 எண்ணிக்கை குறைவாக 78,262 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் 285 முகாம்களில் 26 ஆயிரத்து 36 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 20 நடமாடும் முகாம்கள் மூலம் தேயிலை தோட்டதொழிலாளர்களுக்கும், பழங்குடியினருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இப்பணியில் 1,180 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கூடலூர் வண்டிப்பேட்டை, இரண்டாவது மைல், தேவர்சோலை, நடுவட்டம், டி.ஆர்.பஜார், பைக்காரா ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்