சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் - 2.39 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி :

By செய்திப்பிரிவு

சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் நேற்று நடந்த கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 2.39 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசிபோட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்டத்தில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 20 டோஸ் தடுப்பூசி கையிருப்பு வைக்கப்பட்டு அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை, அனைத்து வாக்குச் சாவடி மையங்கள், சேலம் மாநகராட்சி பகுதி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 1, 392 மையங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது.

தடுப்பூசி மையங்களுக்கு, காலை 7 மணி முதலே மக்கள் ஆர்வமுடன் வந்து, வரிசையில் நின்று தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். முகாமில், பொதுமக்களுக்கு கோவேக்சின் மற்றும்கோவிஷீல்டு தடுப்பூசிகள் முதல் மற்றும் 2-ம் தவணை போடப்பட்டது. மாலை 6 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இலக்கை தாண்டியது

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 12 மற்றும் 19-ம் தேதிகளில் நடந்த சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்களில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 783 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று 500 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.

இம்முகாமில் 50 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் இலக்கை தாண்டி 59,753 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் 579 மையங்களில் ஒரு லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய சிறப்பு முகாம் நிறைவில், மொத்தம் 84 ஆயிரத்து 402 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஏற்கெனவே நடந்த இரு சிறப்பு முகாம்களிலும், இலக்கைத் தாண்டி கூடுதலான எண்ணிக்கையில் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், நேற்றைய முகாமில் இலக்கை அடையவில்லை.

இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறும்போது, கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் பலர் இரண்டாம் தவணைக்கான தேதிக்காக காத்திருக்கின்றனர். இருப்பினும், முதல் தவணை தடுப்பூசி போடுவோரின் சதவீதம் இந்த முகாம் மூலம் அதிகரித்துள்ளது, என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்