காட்பாடியில் திமுக-அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் 3 பேரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி மற்றும் மனுக்கள் வாபஸ் பெற விரும்புவோர்களிடம் அதற்கான படிவத்தில் கையெழுத்து வாங்கும் பணிகள் நேற்று முன்தினம் நடைபெற்றது.
அப்போது, காட்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட 8 -வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட அம்பிகா என்பவர் பிரதான வேட்பாளராகவும், அவருக்கு மாற்று வேட்பாளாராக ரேவதி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில், ரேவதி என்பவர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.
அதேநேரம் பிரதான வேட்பாளரான அம்பிகாவிடம் கையெழுத்து வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த அதிமுக நிர்வாகிகள் அங்கு பணியில் ஈடுபட்ட அரசு அலுவலர்களிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அதிமுக வேலூர் மாநகர மாவட்டச்செயலாளர் எஸ்ஆர்கே.அப்புவும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்கிடையே, காட்பாடி பிடிஓ அலுவலகத்தில் அரசு அலுவலகத்தில் தேவையின்றி கூட்டம் சேர்ந்தது, அத்துமீறி ஆவணங்களை பறித்துச்சென்றது, அரசு அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, அரசு ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்தது என 4 பிரிவுகளின் கீழ் அதிமுக மாநகர மாவட்டச்செயலாளர் எஸ்ஆர்கே. அப்பு உட்பட 4 பேர் மீது காட்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அதிமுக பகுதிச்செயலாளர் ஜனார்த்தனன், ஜெ.பேரவை மாநகர மாவட்ட செயலாளர் அமர்நாத், காட்பாடி முன்னாள் ஒன்றியச்செயலாளர் ஆனந்தன் உட்பட 3 பேரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago