விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி கோலியனூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி, வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதனை நேற்று ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு தெரிவித்தது:
தேர்தல் பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் முகப்புச் சீட்டு, முகவர் சீட்டு போன்றவற்றை மிக கவனமாக பார்க்க வேண் டும். வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு முதல் நாளே வாக்குச்சாவடிக்கு சென்று, வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்குப்பெட்டிகள், ஆவணங்கள் மற்றும் உரிய படிவங்கள் வரப்பெற்றதை உறுதி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், வாக்குப்பதிவு நாளன்றுவேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு வாக்குப்பெட்டியைத் திறந்து காண்பித்து, காலியாக உள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். மேலும் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கான தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் முடித்திட வேண்டும். வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் நாட்குறிப்பு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் நான்கு பதவியிடங்களுக்கான வாக்குச் சீட்டுகளும் தனித்தனியாக நான்கு வண்ணங்களில் பயன்படுத்துவதால் கவனமுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
வாக்காளர்கள் வாக்களித்த பின்னர் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பான முறையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். தேர்தல் பயிற்சி வகுப்பினை பெறும் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேர்தல் பயிற்சி கையேட்டினை படித்து தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். மேலும் சந்தேகங்கள் இருப்பின் சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மற்றும் கண்காணிப்பு அலுவலரிடம் உடனுக்குடன் கேட்டறிந்து, சிறப்பாக தேர்தல் பணியாற்றிட வேண்டும்.
தேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு செலுத்தாதவர்கள் சுகாதாரத்துறை சார்பாக தேர்தல் பயிற்சி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் நடுநிலையுடன் பணியாற்றிட வேண்டும் என்றார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்ரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago