தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பாளையம்புதூரில் சோளப் பயிர் வயலில் வெட்டுக்கிளி பாதிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.சோளப்பயிர் வயல்களில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் : வேளாண் அதிகாரிகள் ஆய்வு

தருமபுரி மாவட்டம் பாளையம் புதூர் பகுதியில் சோள வயல்களில் வெட்டுக்கிளிகள் தாக்குதலை வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

நல்லம்பள்ளி வட்டம் பாளையம்புதூர், பாகல அள்ளி ஊராட்சிகளில் சனி சந்தை, பாளையம்புதூர் கூட்டு ரோடு, தண்டுகாரம்பட்டி, கெங்கலாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் பலரும் சோளப் பயிர் சாகுபடி செய்துள்ளனர். கால்நடைகளில் தீவனத்துக்காக சாகுபடி செய்யப்பட்டுள்ள சோளப் பயிர்களில் வெட்டுக்கிளிகள் தாக்கி சேதப்படுத்தி வருகிறது. சுமார் 20 ஏக்கர் சோளப் பயிர் வெட்டுக்கிளிகளால் சேதமடைந் துள்ளது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் கோவிந்தன், வேளாண்மைத் துறையைச் சேர்ந்த அதிகாரி தாம்சன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேரில் கள ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், சோளப் பயிர்களை தாக்கிய வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல எனவும், புல் வகை பயிர்களை தாக்கும் சாதாரண வெட்டுக்கிளிகள் எனவும் கண்டறியப்பட்டது. எனவே, வெட்டுக்கிளிகள் குறித்து விவசாயிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இவ்வகை வெட்டுக்கிளிகளின் வாழ்க்கை சுழற்சி மற்றும் கட்டுப்படுத்தும் முறை, ஏக்கருக்கு 1 இடம் வீதம் விளக்குப்பொறி அமைத்தல், ஏக்கருக்கு 20 வீதம் பறவை தாங்கிகள் அமைத்தல் உள்ளிட்டவை குறித்து உதவி பேராசிரியர் முனைவர் கோவிந்தன் விளக்கிக் கூறினார்.ஆய்வின்போது, வேளாண் உதவி இயக்குநர் மு.இளங்கோவன், வேளாண் அலுவலர் ஆர்.இளங்கோவன், உதவி வேளாண் அலுவலர்கள் சுரேஷ், இளையராஜா உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE