சேலம் அருகே அனுமதியின்றி கொடிக்கம்பம் நட முயற்சி : இரு பிரிவைச் சேர்ந்த 34 பேர் கைது

சேலம் அருகே அனுமதியின்றி கொடிக்கம்பம் நட முயன்ற சம்பவத்தில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த கல்வீச்சு சம்பவத்தை தடுக்க போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மோதலில் ஈடுபட்ட இருதரப்பிலும் 34 பேரை போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த கே.மோரூர் பேருந்து நிறுத்தம் அருகே ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் கொடிக்கம்பம் நட வருவாய்த் துறை மற்றும் காவல் துறையில் அனுமதி கோரினர். ஆனால், அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் கொடிக்கம்பத்துடன் திரளாக கே.மோரூர் பகுதிக்கு சென்றனர். அவர்களை போலீஸார் தடுத்தனர். மேலும், இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து அங்கு சென்ற ஓமலூர் வட்டாட்சியர் வாசுகி, டிஎஸ்பி சங்கீதா ஆகியோர் கொடிக்கம்பம் நட அனுமதியில்லை என்பதை தெரிவித்தனர். இதனால், அதிகாரிகளுக்கும் கொடிக்கம்பம் நடவந்தவர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில், கொடிக்கம்பம் நட வந்தவர்களுக்கும், எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கல்வீச்சு நடந்தது. இதில் 6 போலீஸார் மற்றும் பொதுமக்களில் 5-க்கும் மேற்பட்ட பெண்கள் காயம் அடைந்தனர். மோதலை தடுக்க போலீஸார் தடியடி நடத்தினர். இதில், 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் அனைவரும் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பாக கொடிக்கம்பம் நட வந்தவர்கள் தரப்பில் 17 பேர், மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்களில் 17 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அங்கு பதற்றத்தை தணிக்க சேலம் எஸ்பி  அபிநவ் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து எஸ்பி  அபிநவ் கூறும் போது, ‘ஒரு பிரிவினர் அனுமதியின்றி கட்சி கொடிக்கம்பம் நட வந்த போது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் வாக்குவாதம் செய்தனர். இதில் இரு தரப்பினரும் கல்வீசி மோதிக் கொண்டனர். ஒவ்வொரு தரப்பிலும் 17 பேர் என இருதரப்பிலும் 34 பேர் மீது தீவட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் பதற்றத்தை தணிக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்