ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகக் கடைகளின் கட்டுமானம் தரமற்றதாக உள்ளதால், அதனை அகற்றி புதிதாக கட்ட வேண்டும், என நாமக்கல் எம்பி ஏ.கே.பி.சின்ராஜ் தெரிவித்தார்.
ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சிக்குச் சொந்தமாக 41 கடைகள் உள்ளன. இதில் பல்வேறு வகையான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலானதால் பல கடைகளின் மேல்தளம் அவ்வப்போது பெயர்ந்து விழுந்தபடி இருந்தது. இதையடுத்து கடைகளை புதுப்பித்து தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதன்பேரில் கடைகளின் மேற்கூரை மட்டும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு ரூ.40 லட்சம் மதிப்பில் தகர கூரைகள் அமைக்க முடிவு செய்து நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இதற்கான பணிகளும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பலத்த காற்றுடன் மழை பெய்தபோது கடைகளின் மீது வேயப்பட்ட தகர கூரைகள் காற்றில் பறந்தன.
இதுதொடர்பாக நாமக்கல் எம்பி ஏ.கே.பி.சின்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கட்டிடங்களின் சுவர்கள் பெயர்ந்து வந்ததால், இப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்வதை நிறுத்தி உத்தரவிட்டார்.
மேலும், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கிருபாகரன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட எம்பி சின்ராஜ் வணிக வளாக கட்டிடங்களை உறுதித் தன்மையுடன் சீரமைக்க வேண்டும், என உத்தரவிட்டார்.
இதுகுறித்து எம்பி சின்ராஜ் கூறுகையில், ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இந்தக் கட்டுமானம் தரமற்றதாக உள்ளது.
எனவே, ஒப்பந்ததாரரிடம் கட்டிடத்தை முழுமையாக அப்புறப்படுத்தி புதிதாக கட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் அக்கட்டிடத்தில் உள்ள குறைபாடுகளை முழுவதும் அகற்றி விட்டு தரமான முறையில் கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்துள்ளார், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago