மதுரையில் குழந்தைகளைக் காட்டி பிச்சை எடுத்த பெற்றோர், உறவினர்களைப் போலீஸார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 35 குழந்தைகள் மீட்கப்பட்டன.
மதுரை நகரில் கொளுத்தும் வெயிலில் போக்குவரத்து சிக்னல், ரயில், பேருந்து நிலையங்கள், கோயில்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பொது இடங்களில் குழந்தைகளை வைத்து பெற்றோர், உறவினர்கள் பிச்சை எடுப்பது அதிகரித்து வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து ஆட்சியர் உத்தரவின்பேரில் குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர் கணேசன், குழந்தைகள் நலக் குழுத் தலைவர் விஜயசரவணன், உறுப்பினர்கள் பாண்டிராஜா, சண்முகம், சாந்தி, ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் பிளவர் ஷீலா ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இவர்கள் பெரியார் பேருந்து நிலையம், ரயில் நிலையம், தெப்பக் குளம், மாவட்ட நீதிமன்றப் பகுதி, கோரிப்பாளையம், காளவாசல் உட்பட 15 க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று குழந்தைகளுடன் பிச்சை எடுப்ப வர்களை கண்காணித்தனர். அப்போது 29 பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கூடிய 16 ஆண், 19 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டனர். இதில் வட மாநிலத்தவர்களும் அடங்குவர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மீட்கப் பட்டவர்களில் பெரும்பாலா னவர்கள் மதுரை சக்கிமங்கலம் அருகே உள்ள கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. ‘‘நாங்கள் பிச்சை எடுக்கவில்லை, பொருட்கள் விற்கிறோம். மேலும் கரோனாவால் அங்கன்வாடி திறக்காத சூழலில் அவர்களை வீட்டில் தனியாக விட்டு வர முடியவில்லை’’ எனத் அவர்கள் தெரிவித்ததாக போலீஸார் கூறினர். இருப்பினும் மீட்கப்பட்ட குழந்தைகள் உண்மையில் சம்பந்தப்பட்டவர்களின் குழந்தை கள் தானா? என்பதைக் கண்டறிய ஆவணங்களின் அடிப்படையில் போலீஸார் விசாரிக்கின்றனர்.
இது குறித்து போலீஸார் கூறும்போது, இது போன்ற செயலில் ஈடுபட்டது குற்றம். குழந்தைகளை துன்புறுத்தி பிச்சை எடுத்திருந்தால் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.கரோனாவால் பள்ளி, அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படவில்லை என்று காரணம் கூறியதை ஏற்க முடியாது என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago