நடமாடும் கரோனா பரிசோதனைக்காக - சேலத்தில் இயக்கிய ஆட்டோக்களுக்குநிலுவை வாடகை வழங்க வலியுறுத்தல் :

சேலம் மாநகராட்சி பகுதியில் நடமாடும் கரோனா கண்டறியும் வாகனம் இயக்கிய ஆட்டோக்களுக்கு நிலுவை வாடகையை வழங்க வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் மனு அளித்தனர்.

கரோனா பரவல் இரண்டாம் அலையின்போது, சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா பாதித்தவர்களைக் கண்டறிய நடமாடும் மருத்துவப் பரிசோதனை குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் ஆட்டோக்களில் வீதிகளில் சென்று காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

தற்போதும் மாநகராட்சி சார்பில் நகரின் முக்கிய இடங்களில் ஆங்காங்கே நடமாடும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்பணிக்காக இயக்கப்பட்ட ஆட்டோக்களுக்கு வழங்க வேண்டிய வாடகை நிலுவை தொகையை வழக்க வலியுறுத்தி, சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். மேலும், இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:

கரோனா பரவல் அதிகரித்திருந்தபோது, சேலம் மாநகராட்சி சார்பில் நடமாடும் பரிசோதனை குழுவுக்காக ஒரு ஆட்டோவுக்கு நாள் வாடகை ரூ.1,000-க்கு 86 ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. தொற்று குறைந்த நிலையில் ஆட்டோக்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டன.

இதனிடையே, கடந்த மே 31-ம் தேதி முதல் செப்டம்பர் 21-ம் தேதி வரை இயக்கப்பட்ட ஆட்டோக்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் 60 ஆயிரம் வரை வாடகை நிலுவை வழங்கப்படாமல் உள்ளது.

இதுதொடர்பாக ஒப்பந்ததாரரிடம் கேட்டால் மாநகராட்சியிடம் இருந்து, வாடகைத் தொகை முழுமையாக வரவில்லை என கூறுகிறார். எனவே, எங்களுக்கு வாடகை நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்