சேலத்தில் 40 மிமீ மழை பதிவு தாழ்வான பகுதியில் தேங்கிய தண்ணீர் :

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கனமழை பெய்தது. சேலத்தில் 40 மிமீ மழை பதிவானது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு குளிர்ந்த காற்று வீசியதுடன், இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அதிகாலை 4.30 மணி வரை மழை நீடித்தது.

மழையால் சேலம் தாதுபாய் குட்டை ரோடு, நாராயணன் நகர், கிச்சிப்பாளையம், ஆறுமுக நகர், பச்சப்பட்டி, சித்தேஸ்வரா, சேர்மேன் ராமலிங்கம் ரோடு, களரம்பட்டி, கருங்கல்பட்டி, நான்கு ரோடு, லீ பஜார், ஐந்து ரோடு உள்ளிட்ட நகரின் தாழ்வான பகுதிகளில் சாக்கடை கால்வாய் நிரம்பி சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனிடையில், மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்துக்காகவும், குடிநீர் குழாய் பதிப்பு பணிக்காகவும் சாலைகள் குழி தோண்டப்பட்டு, மண் சாலைகளால் காட்சி அளித்து வருகிறது.

நேற்று முன்தினம் பெய்த மழையால் மண் சாலைகள் அனைத்தும் சேறும், சகதியுமாக மாறியது. ஏற்காடு பகுதியில் பெய்த மழையால் 60 அடி பாலம் அருகே மலைப்பாதையில் உள்ள மரம் சாலையில் சாய்ந்து விழுந்தது. இதனால், அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தை வெட்டி அகற்றிய பின்னர் போக்குவரத்து சீரானது.

ஏற்காட்டில் பெய்த மழையால் பல இடங்களில் திடீர் நீர்வீழ்ச்சி தோன்றியது. இதில், சுற்றுலா பயணிகள் பலர் ஆர்வத்துடன் குளித்து மகிழ்ந்தனர். மாவட்டம் முழுவதும் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம்: சேலம் 40.8, ஏற்காடு 31, ஆணைமடுவு 2, கரியகோவில் 2, ஓமலூர் 2 மிமீ மழை பதிவானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்