போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் - ஈரோட்டில் மூன்று இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் : அமைச்சர் முத்துசாமி தகவல்

By செய்திப்பிரிவு

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஈரோட்டில் மூன்று இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும், என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் கரோனாவால் பெற்றோரை இழந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு, ஆட்சியர் எச். கிருஷ்ணன் உண்ணி தலைமையில் நடந்தது. நிகழ்வில், கரோனாவால் பெற்றோரை இழந்த 14 குடும்பத்தினருக்கு ரூ.42 லட்சம் உதவித்தொகை, மின்சாரம் மற்றும் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் 7 குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் உள்ளிட்ட ரூ.58 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யவும், அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும் போது, அந்தத் தொகை அந்தக் குழந்தைக்கு வட்டியோடு வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இக்குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்றிடவும் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பெற்றோரை இழந்த 338 குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ஈரோட்டில் விரைவில் 3 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. சோலாரில் 25 ஏக்கரில் பிரம்மாண்டமாக பேருந்து நிலையம், ஒன்றரை ஆண்டுகளில் அமைக்கப்படும்.

அதற்கு முன்பாக, அங்கு தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி இன்னும் ஒன்றரை மாதத்தில் முடிவடையும். கரூர் மார்க்கமாக வரும் பேருந்துகள் இங்கு நிறுத்தப்படும்.

அதைப்போல், கனிராவுத்தர் குளம் பகுதியில் பேருந்து நிலையம் அமைத்து, சத்தியமங்கலம், கோபியில் இருந்து வரும் பேருந்துகள் நிறுத்தப்படும். இதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. இதேபோல் அறச்சலூரில் 4 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

சிக்கைய்ய நாயக்கர் கல்லூரியை அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு ரூ.35 கோடியில் விளையாட்டு அரங்கம், நூலகம் அமைக்கப்படும். உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில், பெறப்பட்ட 42 ஆயிரம் மனுக்களில், 90 சதவீதம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கை 1200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் கூடுதலாக 100 மாணவர்களைச் சேர்த்து, மொத்தம் 250 மருத்துவ மாணவர்கள் கல்வி பயிலவும், முதுநிலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஈரோடு எம்பி கணேசமூர்த்தி, எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா, டி.ஆர்.ஓ. முருகேசன், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்