கொல்லிமலையில் பெண்களிடம் - அதிக குழந்தைகள் பெற்றெடுப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆட்சியர் விழிப்புணர்வு :

By செய்திப்பிரிவு

அதிக குழந்தைகள் பெற்றெடுப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மலைக்கிராம பெண்களிடம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவக் குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை, எருமப்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாட்டின் சராசரியை விட அதிக குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலை பெண்களிடம் உள்ளது. அதிகபட்சமாக 5 குழந்தை பெற்ற பெண்கள் உள்ளனர்.

இதை கட்டுப்படுத்தும் வகையில் பெண்களிடம் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்வதன் அவசியம் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் கொல்லிமலை தேனூர்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஆண், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம், இரு குழந்தைகள் பெற்ற பிறகு குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட பெண்களின் விவரம், கருகலைப்பு செய்து கொண்டவர்களின் விவரம், அதற்கான காரணம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து படசோலை கிராமத்தில் 4 குழந்தை பெற்றுக்கொண்ட பெண்ணின் வீட்டிற்கு மருத்துவக் குழுவினருடன் சென்ற மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தாயையும், குழந்தைகளையும் பார்வையிட்டு அவர்களது ஆரோக்கியம் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், அதிக குழந்தைகள் பெற்றெடுப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பிரபாகரன், கொல்லிமலை வட்டாட்சியர் கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்