பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், கடந்த மூன்று நாட்களில் 1,200 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் கடந்த 20-ம் தேதி முதல் தூய்மை வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. சாக்கடைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
ஈரோடு மாநகராட்சியில் கடந்த 20-ம் தேதி தூய்மைப்பணிகள் தொடங்கின.
ஒரு மண்டலத்திற்கு 100 பணியாளர்கள் வீதம் 4 மண்டலத்திற்கு 400 பணியாளர்கள் தூய்மைப் பணிகளுக்கென நியமிக்கப்பட்டுள்ளனர். மழைக் காலத்தில் அதிக அளவு நீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு தூர்வாரும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறியதாவது:
ஈரோடு மாநகராட்சியில் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே, ‘மெகா கிளீன்’ என்ற பெயரில், 60 வார்டுகளிலும் வாரத்திற்கு மூன்று நாட்கள் சாக்கடை அடைப்புகள் தூர்வாரும் பணியைத் தொடங்கியுள்ளோம். இதில், 28 வார்டுகளில் தூய்மைப்பணிகள் முழுமையாக முடிந்து விட்டன. இந்நிலையில், அரசின் தூய்மை வாரத் திட்டத்தின் கீழ், ஒரு மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு 100 டன் கழிவுகள் வீதம், தினமும் 400 டன் கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. மூன்று நாட்களில் 1200 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago