படித்த இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு மாவட்டக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்டக் காவல்துறை கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களைக் குறிவைத்து, சில போலி நபர்கள் மற்றும் இடைத்தரகர்கள், தங்களுக்கு அனைத்து அரசு துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் நன்கு அறிமுகம் என்றும், அவர்கள் மூலம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி வருகின்றனர். அரசு பணியிடங்களை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் பெற்று இவர்கள் ஏமாற்றி வருகின்றனர்.
இதுதொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்தில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு வேலைகள் அனைத்தும், முறையாக எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலமே நடத்தப்பட்டு, தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம்
செய்யப்படுகின்றனர்.
எனவே, வேலை தேடி கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தினர் மற்றும் பெற்றோர் இது போன்ற மோசடி நபர்களின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.
இதுபோன்ற செயல்களுக்கு பணம் பெறுபவர்கள் மட்டுமின்றி பணம் கொடுப்பவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உண்டு. இது போன்று சந்தேக நபர்கள் குறித்த தகவல்களை, ஈரோடு மாவட்ட காவல்துறையின் இலவச செல்போன் எண்ணுக்கு ( 9655220100) தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் என ஈரோடு மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago