தேசிய அஞ்சல் வார கொண்டாட்டத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு அஞ்சல் கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தேசிய அஞ்சல் வாரம் அக்டோபர் 11-ம் தேதி முதல், 17-ம் தேதி வரை கொண்டாடப்படுவதையொட்டி, பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல்துறை பல்வேறு போட்டிகளை அறிவித்துள்ளது. இதன்படி, 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியர், ‘Your vision for India post’ என்ற தலைப்பில் தமிழில் கட்டுரைப் போட்டியிலும், 5-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள், ‘Your dream post office’ என்ற தலைப்பில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஒளிப்படக் காட்சிகளை (வீடியோ) எடுத்து அனுப்பலாம். செல்வமகள் சேமிப்புத்திட்டத்திற்கான விளம்பர போஸ்டரை வடிவமைக்கும் போட்டியில், 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்கலாம்.
ஏ3 அளவுள்ள வெள்ளைநிற சார்ட் பேப்பரை போஸ்டர் வடிவமைக்கும் போட்டிக்கு பயன்படுத்த வேண்டும். கட்டுரைப் போட்டிக்கு ஏ4 பேப்பரில் 300 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதி அனுப்ப வேண்டும். மாணவர்கள் தங்களது படைப்புடன், தங்களது அடையாள அட்டையின் நகலை இணைத்து, பதிவு அல்லது விரைவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.
கட்டுரை அல்லது போஸ்டர் பின்புறம் மாணவரின் பெயர், பிறந்ததேதி, வகுப்பு, பள்ளியின் பெயர் மற்றும் பெற்றோரின் தொலைபேசி எண்ணைக் குறிப்பிட வேண்டும். ஒளிப்பதிவு (வீடியோ காட்சி) காட்சிகளை postalweek.erode@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15 எம்பி அளவுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மாணவர்கள் தங்கள் படைப்புகளை அக்டோபர் 6-ம் தேதிக்குள், ‘முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ஈரோடு அஞ்சல் கோட்டம், ஈரோடு - 638001’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0424 2252400 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago