‘திருநங்கைகளின் உரிமைகளுக் காக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறேன்’ என குடியாத் தம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கும் போட்டியிடும் திருநங்கை பாண்டியம்மாள் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் 2,478 பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சுமார் 8,170 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் மனுக்கள் நேற்று பரிசீலனைக்கு பிறகு ஏற்கப்பட்டது. மனுக்களை திரும்பப்பெற வரும் 25-ம் தேதி (நாளை) கடைசி நாளாகும். அன்றைய தினம் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் சின்னங்களுடன் வெளியாகும்.
வேலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியகுழுவின் 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு இந்திய குடியரசு கட்சி சார்பில் திருநங்கை பாண்டியம்மாள் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனு நேற்று ஏற்கப்பட்ட நிலையில் தேர்தலில் அவர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில் போட்டியிடும் ஒரே திருநங்கை அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக பாண்டியம்மாள், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும் போது, ‘‘குடியாத்தம் அடுத்த உள்ளி கிராமம் தான் எனது சொந்த ஊர். பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். 15 வயதாக இருந்தபோது ஹார்மோன் மாற்றத்தால் திருநங்கையாக மாறினேன்.
ஆரம்பத்தில் குடும்பத்தினரே என்னை வெறுக்க தொடங்கினர். பெண்ணாக மாறிய பிறகு சில ஆண்டுகள் கழித்து வீட்டில் சேர்த்துக் கொண்டனர். என்னைப்போன்ற திருநங்கை களுக்கு இந்த சமூகத்தில் பெரிய அளவில் யாரும் அங்கீகாரம் அளிப்பதில்லை. எங்கு சென்றாலும் விரட்டுகிறார்கள். ஆனால், நாங்களும் மற்றவர்களைப் போல் வாழ ஆசைப்படுகிறோம். இந்த சமுதாயத்துக்கு நல்லது செய்ய விரும்புகிறோம். எங்களுக்கு ஆதரவு கொடுக்கத்தான் யாரும் இல்லை. மரியாதையும் கொடுப்பதில்லை.
தேர்தலில் எனக்கு வாக்களிக்க எங்கள் பகுதி பெண்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். எங்கள் கிராமத்தில் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க பாடுபடுவேன்.
எனக்கு வாய்ப்பளித்த இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசனுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்’’ என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago