உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளர் களை, பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஈரோடு மாவட்ட உள்ளாட்சித் துறை பணியாளர் சங்கம் (ஏஐடியுசி) சார்பில் மனு அளிக்கப் பட்டது.
ஏஐடியுசி மாநிலத் தலைவரும், திருப்பூர் எம்பியுமான கே.சுப்பராயன் தலைமையில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நா.பெரியசாமி, பி.எல்.சுந்தரம், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் எஸ்.சின்னசாமி, செயலாளர் ஆர். மணியன் உள்ளிட்டோர், ஈரோடு ஆட்சியர் மூலம் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
ஈரோடு மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, நான்கு நகராட்சிகள், 42 பேரூராட்சிகள், 225 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் தூய்மைப் பணிகள், பொது சுகாதாரம், நோய்த்தடுப்பு, குடிநீர் விநியோகம், தெருவிளக்கு பராமரிப்பு, அலுவலகப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் 10 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 75 சதவீதம் பேர் சுய உதவிக்குழு மற்றும் ஒப்பந்த முறைகளில் தினக்கூலிப் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் இவர்களை, நேரடிப் பணியாளர்களாக்க வேண்டும். மூன்றாண்டுகள் பணிபுரிந்த அனைவரையும், பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
அரசாணைப்படியான குறைந்த பட்ச ஊதியத்தை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் அமலாக்க வேண்டும். 5-ம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும்.
தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் சட்டப்படியான பாதுகாப்பு உபகரணங்களையும், தொழிற்கருவிகளையும் வழங்க வேண்டும். கரோனா தொற்று காலத்தில் பணிபுரிந்த உள்ளாட்சித்துறை தூய்மைப்பணியாளர்களுக்கு, அரசு அறிவித்துள்ள ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கோரிக்கை மனு அளிப்பதற்காக உள்ளாட்சிகளில் பணியாற்றும் ஏராளமான பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். பெரும் திரளாக கூடியிருந்த அவர்கள் மத்தியில், ஏஐடியுசி நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தபின், ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago