காவிரி ஆற்றில் சாய துணிகளை அலசிய கும்பல் - மாசுகட்டுப்பாடு வாரிய ஆய்வில் கண்டுபிடிப்பு :

By செய்திப்பிரிவு

ஈரோட்டில் காவிரி ஆற்றில் சாயத்துணிகளை அலசி மாசுபடுத்தும் ஆலைகள் குறித்து மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஈரோடு மற்றும் நாமக்கல் பள்ளிபாளையம் பகுதியில் செயல்படும், சாய ஆலைகளில் இருந்து கொண்டு வரப்படும் துணிகள், ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் முனியப்பன்கோயில் அருகில், நேரடியாக ஆற்றில் அலசி வருகின்றனர். இதனால், ஆற்று நீர் மாசடைந்து வருகிறது. இரவு நேரங்களில் சரக்கு வாகனங்களில், சாயத்துணிகள் இப்பகுதிக்கு கொண்டு வரப்படுவது குறித்து மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு காவிரிக்கரையோர பகுதிகளில் மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காவிரி ஆற்றில் சிலர் சாயத் துணிகளை அலசிக் கொண்டிருந்தது தெரியவந்தது. அதிகாரிகள் வருவதை கண்ட அந்த கும்பல், சாய துணிகளையும், சரக்கு வாகனங்களையும் அப்படியே விட்டு விட்டு தப்பியோடி விட்டனர்.

பதிவு எண் இல்லாத அந்த வாகனம் மற்றும் துணிகளைக் கைப்பற்றிய மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், எந்த சாய ஆலையில் இருந்து துணிகள் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல், வெட்டுக்காட்டு வலசு, ராயபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் சாய ஆலைகளில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுகிறதா என்பது குறித்தும் அதிகாரிகள் நேற்று முன் தினம் இரவு ஆய்வு மேற்கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்