நகைக் கடன் தள்ளுபடியில் அனைவரும் பயன்பெற முடியாது : எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டு

கூட்டுறவு வங்கி நகைக் கடன் ரத்து செய்வதில் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதால், அனைத்து மக்களும் பயன்பெற முடியாது என எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், கலந்து கொண்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான பழனிசாமி கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் குறித்து இன்னும் திட்டமிடப்படவில்லை. 9 மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும்.

எந்த ஆட்சியாக இருந்தாலும் வங்கி முறைகேட்டில் நடவடிக்கை எடுப்பார்கள். தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அனைத்திலும் முறைகேடு நடைபெற்றதாக தெரியவில்லை.

நீட் தேர்வு தொடர்பாக நாங்கள் போட்ட தீர்மானத்தை தற்போது சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளனர். நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற கோரிக்கையை நம்பி 43 லட்சம் பேர் காத்திருந்தனர். தேர்தல் நேரத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் நகைக் கடன் ரத்து செய்யப்படும் என கூறினார்கள். ஆனால், இப்போது கூட்டுறவு வங்கி நகைக் கடன் ரத்து செய்வதில் பல நிபந்தனைகள் விதிக்கப்படுவதால், அனைத்து மக்களும் பயன்பெற வாய்ப்பில்லை.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற அடிப்படையில் 2024-ம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வர வாய்ப்புள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஆயிரம் பேர் வரை அமரலாம். எனவே எம்பி-க்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

திமுகவில் 13 பேர் மீது சொத்துகுவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. ஒரு லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாமல் கொள்முதல் மையங்களில் தேங்கியுள்ளது. மேலும், மழையில் நனைந்து வீணாகி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்