வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வாக்குச்சாவடி மையங்களை இடமாற்றம் செய்தல் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் ப. வெங்கடபிரியா தலைமை வகித்து பேசியது:

பெரம்பலூர்(தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 332, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் 320 என மாவட்டத்தில் மொத்தம் 652 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இவற்றில், பெரம்பலூர்(தனி) தொகுதியில் 26 மற்றும் குன்னம் தொகுதியில் 7 வாக்குச்சாவடி மையங்களின் கட்டிடங்கள் பழுதடைந்துள்ளதால், வேறு கட்டிடங்களுக்கு மாற்றியமைக்க பரிந்துரைத்து, கருத்துருக்கள் வரப்பெற்றுள்ளன. புதிய வாக்குச்சாவடி மையங்கள் உருவாக்கப்படவில்லை. இதுதவிர, வாக்குச்சாவடி மாற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகளிடம் இருந்து எந்தவித ஆட்சேபணையும் வரவில்லை என்றார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கன்னி, கோட்டாட்சியர் நிறைமதி சந்திரமோகன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) தி.சுப்பையா, தனி வட்டாட்சியர் (தேர்தல்) சீனிவாசன் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அரியலூரில்...

அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில், வாக்குச்சாவடி மறுசீரமைப்பு குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தலைமை வகித்து பேசியது:

அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 8, ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் 25 என அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 33 வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு ஆட்சேபணை அல்லது திருத்தங்கள் இருந்தால், அதுகுறித்து விண்ணப்பம் அளிக்கும்பட்சத்தில் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னூலாப்தீன், கோட்டாட்சியர்கள் ஏழுமலை(அரியலூர்), அமர்நாத் (உடையார்பாளையம்) உட்பட பலரும் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்