ஜெயங்கொண்டம் அருகே 3 மாத பெண் குழந்தையை ரூ.1.80 லட்சத்துக்கு விற்பனை செய்த தாய், தந்தை உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த வடவீக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன்(39), கொத்தனார். இவரது மனைவி மீனா(29). இவர்களுக்கு ஏற்கெனவே 3 பெண் குழந்தைகள் இருந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 4-வதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், இந்த 3 மாத பெண் குழந்தையை பெற்றோர் விற்பனை செய்துவிட்டதாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் துரைமுருகனுக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், ஜெயங்கொண்டம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சரவணனுடன் கொத்தனார் வேலை பார்த்துவந்த திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த முத்தையன்(52) மற்றும் அவரது நண்பர்களான ஈரோடு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன்(56), செந்தில்குமார்(41) ஆகியோர் மூலமாக, கோயம்புத்தூர் சாய்பாபா காலனியைச் சேர்ந்த வெங்கடேசன்(41), அமுதா(37) என்ற தம்பதியருக்கு ரூ.1.80 லட்சத்துக்கு குழந்தையை விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், குழந்தையை வாங்கிய தம்பதியர், ராஜேந்திரன், செந்தில்குமார் ஆகியோருக்கு உறவினர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸார் நேற்று முன்தினம் இரவோடு இரவாக கோவைக்குச் சென்று, குழந்தையை மீட்டு, ஜெயங்கொண்டத்துக்கு நேற்று கொண்டு வந்தனர். மேலும், இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோர் மற்றும் ராஜேந்திரன், செந்தில்குமார், முத்தையன், வெங்கடேசன், அமுதா ஆகிய 7 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago