வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாளான நேற்று - அரசியல் கட்சி வேட்பாளர்கள் கடும் ஆர்வம் : பாளையங்கோட்டையில் போக்குவரத்து நெரிசல்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 6 மற்றும் 9-ம் தேதி களில் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கி, நடைபெற்று வந்தது. தொடக்கத்தில் மந்தமாக இருந்த மனு தாக்கல், இறுதி நாட்களில் விறுவிறுப்படைந்தது. முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டன. வேட்புமனு தாக்கலுக்கு இறுதி நாளான நேற்று திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், தங்கள் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் திரண்டதால் கடும் கூட்டம் காணப்பட்டது.

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பாளர் ஒருவர் மாட்டு வண்டியில் வந்து மனு தாக்கல் செய்தார். இந்த ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ள சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் கூட்டம் அதிகமிருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒன்றிய அலுவலகங்களில் மனு தாக்கல் செய்பவருடன் 5 பேரை மட்டுமே உள்ளே செல்ல போலீஸார் அனுமதித்தனர்.

தென்காசி: தென்காசி மாவட்டத் தில் ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர் மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 6-ம் தேதியும், கடையநல்லூர், குருவிகுளம், சங்கரன்கோவில், செங்கோட்டை மற்றும் தென்காசி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் 9-ம் தேதியும் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் 754 வாக்குப்பதிவு மையங்களிலும், இரண்டாம்கட்ட தேர்தல் 574 வாக்குப்பதிவு மையங்களிலும் நடைபெற உள்ளது.

நேற்று அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி அலுவல கங்களில் கூட்டம் களைகட்டியது.

வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இன்று (23-ம் தேதி) வேட்புமனுக்கள் பரிசீலனை நடக்கிறது. வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி நாளை (24-ம் தேதி) நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்