குற்றாலத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை சாரல் சீஸன் களைகட்டும். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் சாரல் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டபோது, குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கரோனா பரவல் குறைந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டபோதிலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தான் அருவிகளில் குளிக்க கட்டுப்பாடு களுடன் அனுமதி அளிக்கப்பட்டது.
தடை நீடிப்பு
இந்த ஆண்டு கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக கடந்த மே மாதம் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மீண்டும் கரோனா பரவல் குறையத் தொடங்கியதும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆனால், குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை இன்னும் நீடிக்கிறது.கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் சாரல் மழை பெய்யத் தொடங்கி அருவிகளில் நீர்வரத்து ஏற்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதனால் அருவிகளில் தொடர்ந்து நீர் வரத்து இருந்தது. அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படாததால் குற்றாலம் தொடர்ந்து வெறிச்சோடி காணப்படுகிறது.
வாழ்வாதாரம் பாதிப்பு
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தென்மேற்கு பருவக்காற்றின் வேகமும் குறைந்துள்ளது. இதுவரை இருந்த தென்றல் காற்று, அனல் காற்றாக வீசுகிறது. அருவிகளில் குறைவான அளவில் தண்ணீர் விழுகிறது. இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் சுற்றுலா பயணிகளின்றி குற்றாலத்தில் சாரல் சீஸன் முடிவுக்கு வந்துள்ளது. இதனால், சுற்றுலா பயணிகளை நம்பி வியாபாரத்தில் ஈடுபடும் குற்றாலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் இரண்டாவது ஆண்டாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.குற்றாலத்தில் சாரல் சீஸன் காலத்தில் அரசு சார்பில் சாரல் விழா நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2019-ம் ஆண்டு சாரல் விழா நடைபெறவில்லை. 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ம் தேதி தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப் பட்டதில் இருந்து இதுவரை சாரல் விழா நடத்தப்படவில்லை. தொடர்ந்து 3-வது ஆண்டாக சாரல் விழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago