பவானி அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த ரூ.2 கோடி மதிப்பிலான வாழை மரங்கள் சேதமடைந்தன.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஒலகடம் பேரூராட்சிக்குட்பட்ட எட்டிக்கொட்டை, தாள பாளையம், கூனாக்கபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில், செவ்வாழை, கதலி,நேந்திரம் உள்ளிட்ட வாழை ரகங்கள் பயரிடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு, இப்பகுதிகளில் பலத்த காற்றுடன், கனமழை பெய்தது. இதன் காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:
இப்பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில், கதலி, செவ்வாழை, நேந்திரம் வாழை ரகங்கள் பயிரிடப்பட்டிருந்தது. இரு மாதத்தில் வாழைகள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், சூறைக்காற்றுடன் கூடிய மழையால், சேதமடைந்துள்ளன. இதனால், ரூ.2 கோடி வரை எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. வேளாண்மை துறையினர் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும், என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago