விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா ஆட்சியர் மோகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் ஆட்சியர் மோகன் பேசியது:
பாரதியாரின் நினைவு நாள் ‘மகாகவி நாளாக’ கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து, அதன்படி கடைப்பிடித்து வருகிறோம். ‘மகாகவி நாள்’ நிகழ்வையொட்டி பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப்போட்டி நடத்தி, பாரதி இளங்கவிஞர் விருது மாணவர் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் வழங்கப்படுகிறது.
பாரதியார், நம் நாடு சுதந்திரம் அடைய வேண்டி பல கட்ட போராட்டங்களை நடத்தி சிறைக்கு சென்றுள்ளார். பெண்கள் விடுதலை, தீண்டாமை போன்றவற்றிற்காக தன் கவிதை மூலம் உரக்க குரல் கொடுத்தவர். கவிஞனாக மட்டுமல்லாமல் சிறந்த எழுத்தாளராகவும், நல்ல பத்திரிக்கையாளராகவும் இருந்தவர் பாரதியார்.
‘மொழி காப்போம்,இனம் காப்போம், தாய் திருநாட்டை காப்போம், பசி போக்கி பல கல்விப் பயின்று பாரை உயர்த்துவோம், சாதி நீக்கி சமத்துவம் பேணி ஆணும் பெண்ணும் சமமாக வாழ்வோம்’ என்பது பாரதியின் பெருங்கனவாகும்.பாரதி கூறிய வாக்கினை மெய்ப்பித்திடும் வகையில் இன்று பல்வேறு துறைகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சிறந்து விளங்கி வருகின்றனர்.
கரோனா தொற்றினால் நீண்ட இடைவெளிக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டு, சட்டக்கல்வி பயின்று வரும் மாணவ, மாணவியர்கள் பாரதி கூறிய வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொண்டு பெண்கள் மற்றும் அனைவருக்குமான சமநீதி, தீண்டாமை, சட்டம் ஒழுங்கு போன்றவற்றை நன்கு பயின்று, வரும் காலங்களில் சிறந்த சட்டமேதைகளாக விளங்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழாப் பேரணியை கொடியசைத்து ஆட்சியர் தொடங்கி வைத்தார். இப்பேரணியில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் பாரதியாரின் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கலந்து கொண்டனர். முன்னதாக சட்டக்கல்லூரி வளாகத்தில் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் மரக்கன்றினை ஆட்சியர் நட்டார்.
இந்நிகழ்வில் எஸ்பி ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி முதல்வர் கயல்விழி, கோட்டாட்சியர் ஹரிதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago