நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு ஓட்டலை விரைந்து சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், என சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் உத்தரவிட்டார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே ராசாம்பாளையம் ஊராட்சி தண்ணீர்பந்தல் பேருந்து நிலையம் அருகில் 1.96 ஏக்கர் பரப்பளவில், 8 ஆயிரம் சதுரஅடியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தமிழ்நாடு ஓட்டல் கடந்த 2000-ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு 16 அறைகளும், ஒரு உணவகமும் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த ஓட்டல் கட்டப்பட்ட முதல் நான்கு ஆண்டுகள் மட்டும் ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டது. குத்தகை காலம் முடிந்தவுடன் 2004-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை அரசு நிர்ணயம் செய்த வாடகையின்படி, நாமக்கல் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் நாமக்கல் மகளிர் தொழிற்பயிற்சி நிலையம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து 2016-ம் ஆண்டு முதல் அக்கட்டிடம் பயன்பாடின்றி உள்ளது. இந்த ஓட்டலில் சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். உணவு விடுதி மற்றும் தங்கும் விடுதி அறைகள் அனைத்தையும் திறந்து பார்வையிட்டார்.
தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள இந்த ஓட்டலை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இதற்காக விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு உடனடியாக அனுப்பும்படியும் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, நாமக்கல் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் த.சக்திவேல், ஏற்காடு தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் ப.பிரபுதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
படம் உள்ளது.
நாமக்கல் அருகே ராசாம்பாளையத்தில் பயனற்று கிடக்கும் தமிழ்நாடு ஓட்டலை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆய்வு செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago