ஈரோடு மாவட்டத்திலுள்ள அனுமன் நதியின் கரைப்பகுதியில் தொழிற்சாலைகள் அமைக்க தடை விதிப்பதோடு, மூன்று தடுப்பணைகளைக் கட்ட வேண்டும் என தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் சுதந்திரராசு, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:
குரங்கன் ஓடை எனும் அனுமன் நதி சென்னிமலை பகுதியில் உற்பத்தியாகி, மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டங்களின் வழியாகச் சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது. மொடக்குறிச்சி தொகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாய பயன்பாட்டுக்கும் அனுமன்நதி அடிப்படையாக உள்ளது. அனுமன் நதியின் குறுக்கே, 3 இடங்களில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி, அரசுக்கு ஏற்கெனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனுமன் நதியின் இருகரை பகுதி விவசாய நிலங்களை பெரிய நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து வாங்கி வருகிறார்கள். இதில், பல நிறுவனங்கள், தங்களது ரசாயன கழிவுகளை அனுமன் நதியில் செலுத்தலாம் என்ற நோக்கத்திலேயே விளை நிலங்களை வாங்கியுள்ளனர்.
தற்போது குலவிளக்கு பகுதியில், சாயப்பட்டறை கழிவுகளை கலக்க முயற்சி நடக்கிறது. ஆனந்தம்பாளையம் ஊராட்சியில் உள்ள நூற்பாலை கழிவுகளை கலக்குகிறார்கள். இதை உடனடியாக தடுக்க வேண்டும். அதே போல, ஆனந்தம்பாளையம் ஊராட்சி, செல்லாத்தாபாளையம் பகுதியில் ஓடையின் கரையில், ரசாயன ஆலை அமைக்கவும் முயற்சி நடக்கிறது.
எனவே, அனுமன் நதியில், கழிவுநீர் கலக்கும் தொழிற்சாலையை அனுமதிக்கக்கூடாது. அதே சமயம் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் அனுமன் நதியின் இருபுறமும் எந்த தொழிற்சாலைக்கும் அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago