நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் - மண், பாசன நீர் பரிசோதனை செய்ய பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு பயிற்சி : விண்ணப்பிக்க அழைப்பு

By செய்திப்பிரிவு

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் பிளஸ் 2 படித்தவர்களுக்கான மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து அறிவியல் நிலைய தலைவர் சி.ஷர்மிளா பாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் 'மண் மற்றும் பாசனநீர் பரிசோதனை ஆய்வக உதவியாளர்' என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி வரும் 28-ம் தேதி தொடங்க உள்ளது. 25 பேருக்கு 25 நாள் இப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பயிற்சி முகாமில் ஆய்வகம் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு முறைகள், ஆய்வக கையேடுகள் பராமரிக்கும் முறைகள், ஆய்விற்கு தேவையான கரைசல்கள் தயாரிக்கும் முறைகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படும்.

மேலும், ஆய்விற்கு பின்னர் மண்வள மற்றும் பாசன நீர் வள அட்டை தயாரிக்கும் முறைகள், பயிர்களுக்கேற்ற உரம் பரிந்துரை வழங்குவது, பாசன நீரின் தரத்திற்கு ஏற்ப பயிர்களை தேர்ந்தெடுத்தல் குறித்து விரிவாக பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கங்கள் காண்பிக்கப்படும். இப்பயிற்சியல் கலந்து கொள்ள ஆர்வமுள்ள பிளஸ் 2 வகுப்பில் கணிதம், அறிவியல் மற்றும் பயாலஜி பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம்.

ஆர்வமுள்ளவர்கள் வரும் 27-ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். மேலும், புகைப்படம், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை பயிற்சி ஆரம்பிக்கும் முன்னதாக சமர்ப்பிக்கவேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்