நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகளை, அன்றைய தினமே திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கிற்கு மாற்றம் செய்ய வேண்டுமென ஈரோட் ஆட்சியர் எச். கிருஷ்ணன் உண்ணி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், ஈரோடு மாவட்டத்தில் 34 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. விவசாயிகளிடம் இருந்து ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கோபியை அடுத்த நன்செய் புளியம்பட்டியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில், மாவட்ட ஆட்சியர் எச். கிருஷ்ணன் உண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அலுவலர்கள் கூறும்போது, இதுவரை விவசாயிகளிடம் இருந்து 110 டோக்கன் பதிவுகள் செய்யப்பட்டு, தற்போது வரை 71 விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இருப்பில் 39 விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்ய வேண்டி உள்ளது, எனத் தெரிவித்தனர்.
அன்றைய தினம் கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகளை, அன்றைய தினமே திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கிற்கு மாற்றம் செய்ய வேண்டுமென ஆட்சியர் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து நன்செய் புளியம்பட்டியில் அமைந்துள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பெண்கள் உண்டு உறைவிடப்பள்ளி, வாணிப்புத்தூர் பேரூராட்சி அலுவலகம், நஞ்சை துறையம்பாளையம் ரேஷன் கடை ஆகியவற்றில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். கள்ளிப்பட்டி பகுதியில் அமைந்துள்ள கழனி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தினைப் பார்வையிட்ட ஆட்சியர், நிறுவனத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கொள்முதல் அலுவலர் நசீர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago